அகந்தை
அகந்தை அனைவரையும் ஆட்டி படைக்கிறது.
அகந்தை கொண்டவன் தான் பிறரை விட உயர்ந்தவன்
என்ற எண்ணம் கொள்கிறான்.அதனால்
பிறர் அவனை புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
பிறர் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றான்
மறுப்பவர்களை வெறுக்கின்றான்.காலபோக்கில் தீய வழிகளை கையாண்டு
அவர்களை அழிக்கவும் துணிகின்றான்
அகந்தை கொண்டவன் மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை
எப்போதும் தான் சொல்வதையே மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று விரும்புகிறான்.
அகந்தையினால்தான் மனிதன் தானும் துன்பமடைகிறான்
சக மனிதர்களையும்,உயிர்களையும் துன்பத்துக்கு ஆளாக்குகிறான்
சில பேர் சொல்லுவார்கள்,தனக்கு அகந்தையே கிடையாது.
ஆனால் எதற்கெடுத்தாலும் தான்தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்றும்,
தன்னால்தான் எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன என்றும்
தான் இல்லாவிட்டால் ஒன்றும் நடைபெறாது என்றும் மார் தட்டிகொள்ளுவார்கள்
அவர்களிடம் நீங்கள் இப்படி பேசுவது
அகந்தை கொள்ளுவதற்கு சமம் என்று சொல்லிவிட்டால் போதும்
அப்படி சொல்லியவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்
அதுதான் அகந்தையின் மகத்துவம்.
அது ஒரு மனிதரிடம் இல்லை என்று நம்ப வைத்து
அதுவே அவர் மனம் முழுவதையும் ஆட்கொண்டுஇருக்கும்.
அதை அவர்கள் அறியமாட்டார்கள் என்பதுதான் விசித்திரம்.
ஒருவன் தனக்கு அகந்தை இல்லை என்று சொல்வதே
அகந்தையின் வெளிப்பாடுதான்.
அதனால்தான் தன்னை உணர்ந்த மகான்களும்,
ஞானிகளும் தன்னை நாயினும் கடையேன் என்றும்,
புழுவினும் சிறியேன் என்றும்
எல்லாவற்றையும் நிகழ்த்தவல்ல சக்தி படைத்திருந்தும்
எல்லாம் இறைவன் செயல் என்றும்,
அவன் ஆணைப்படிதான் தான் செயல்படுவதாகவும்,
தான் அவன் கையில் ஒரு கருவி என்றும் அடக்கத்துடன் இயம்புவார்கள்.
அனைவரிடமும் பணிவாகவும்,அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.
ஆனால் போலிகள் தான்தான் சர்வ சக்தி படைத்தவர்கள் என்றும்,
தானே கடவுள் என்றும் மக்களை ஏமாற்றி கொண்டு திரிவார்கள்.
பணத்துக்கும், புகழுக்கும் அடிமைப்பட்ட இந்த போலிகள்
தனக்கு மிஞ்சி இவ்வுலகில் எவரும் இல்லைஎன்றும்
,தனக்கு தானே புகழ்மாலை சூட்டி கொண்டும்,
தன்னை சுற்றி துதிபாடும் கூட்டத்தை வைத்துக்கொண்டு
மக்களை ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து வருவார்கள்.
அகந்தை கொண்டு அலைபவர்கள் சில காலத்திற்கு பிறகு
அனைவராலும் ஒதுக்கப்பட்டு கந்தை துணியை போல் தூக்கி எறியப்படுவது உறுதி.
அகந்தையை முழுவதுமாக ஒழித்தவன் மட்டுமே
எல்லா உயிரினத்திலும் உறையும்,
எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து விளங்கும்
பரம்பொருளை தரிசிக்க முடியும் என்பதே
இறைவனை உணர்ந்தவர்கள் வாழ்ந்து காட்டிய வழி
என்பதை உண்மையை தேடும் சாதகர்கள் புரிந்து கொண்டு
போலிகளின் பின்னால் சென்று
வாழ்க்கையை தொலைக்காமல்
எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home